🦇‘‘கனவில் கூட துரோகம் இழைக்க மாட்டார் என நட்பின் உறுதியைப் பற்றி கூறுவார்கள். இன்று அதெல்லாம் வெறும் கற்பனை. நம்பிக்கை துரோகம் செய்வது இயல்பாகி விட்டிருக்கிறது.
🦇மனசாட்சி உள்ளவர்கள்தான் துன்பப்படுகிறார்கள். துரோகத்தின் வரலாறு மிக நெடியது.
🦇ஒரு காட்டில் வாழும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் திடீரென ஒருநாள் காடு யாருக்குச் சொந்தம் என்கிற பிரச்சினை உருவானது.
🦇‘காலம் காலமாக மரங்களில் நாங்கள் கூடுகட்டி வாழ்கிறோம். அதனால் காடு எங்களுடையது’ என்றன பறவைகள் .
🦇விலங்குகளோ ‘இது நாங்கள் பிறந்த இடம். காட்டினை நம்பியே நாங்கள் வாழ்கிறோம். ஆகவே காடு எங்களுடையது!’ என்றன. இதனால் சண்டை உருவானது.
🦇ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன.
பறவைகள் தங்கள் பக்கம் சண்டையிட வருமாறு வவ்வாலை அழைத்தன.
🦇 வெளவாலுக்கு அதில் விருப்பமில்லை. அது சுகமாக பழங்களைத் தின்றபடியே ‘எனக்கு கண் வலி. இல்லாவிட்டால் நிச்சயம் உங்களுக்காக சண்டைபோட வருவேன்’ என்றது.
🦇‘நன்றி நண்பனே..!’ என பறவைகள் விடைபெற்றன.
சண்டையில் விலங்குகள் ஜெயிப்பது போன்ற சூழல் உருவானது.
🦇ஒருவேளை விலங்குகள் ஜெயித்துவிட்டால் பறவைகளைக் காட்டைவிட்டு வெளியேற்றிவிடுவார்கள்.
🦇அதற்கு முன்பாக நாம் விலங்குகளுடன் சேர்ந்துகொண்டுவிட வேண்டும் என்று வெளவால் யோசித்தது.உடனே விலங்குகளின் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ளும்படி கேட்டது.
🦇 ‘நீ ஒரு பறவை. உன்னை சேர்த்துக்கொள்ள முடியாது!’ என்றன விலங்குகள்.
🦇‘இல்லை! சிறகுகள் இருந்தாலும் நான் பறவை இனமில்லை. குட்டி போட்டு பால் தருவதால் நானும் விலங்கினமே..’ என்றது வெளவால்.
🦇விலங்குகளும் வெளவாலை தங்கள் பக்கம் சேர்த்துக் கொண்டன. உடனே வவ்வால் சொன்னது: ‘பறவைகளின் பலவீனம் பசி. தானியத்தைக் காட்டி பறவைகளை எளிதாகப் பிடித்துவிடலாம்.
🦇பறவைகள் குடிக்கும் நீரில் விஷத்தைக் கலந்துவிட்டால் அவற்றை மொத்தமாகக் கொன்றுவிடலாம்!’
🦇இதைக் கேட்ட விலங்குகள் ஆரவாரம் செய்தன. சண்டை தொடர்ந்தது. திடீரென பறவைகள் பக்கம் ஜெயிப்பது போன்ற சூழல் உருவானது. உடனே வவ்வால் பறவைகளிடம் வந்து சேர்ந்தது.
🦇‘சகோதரா! நான் குட்டிப் போட்டு பாலூட்டினாலும் நான் விலங்கினமில்லை. நான் உங்களைப் போல பறப்பவன். விலங்குகள் என்னை மிரட்டியதால் இதுவரையில் அவர்கள் பக்கம் இருந்தேன்!’ என்றது.
🦇இப்போது வெளவாலைப் பறவைகள் தங்கள் அணியில் சேர்த்துக்கொண்டன. ‘விலங்குகள் நெருப்புக்கு பயந்தவை. காட்டுக்கு தீ வைத்துவிட்டால் விலங்குகள் மொத்தமாக அழிந்துவிடும். மிருகங்களுக்கு அறிவு கிடையாது. பறவைகள்தான் புத்திசாலிகள்..’ என்றது வெளவால்.
🦇அதைக் கேட்டு பறவைகள் மகிழ்ச்சியில் சிறகடித்தன. சண்டை தொடர்ந்தது. முடிவில் கடவுள் தலையிடவே சமாதானம் ஏற்பட்டது.
🦇‘காடு அனைவருக்கும் சொந்தமானது. மின்மினிப் பூச்சிகள் அழிந்துபோனால்கூட காடு அழியத் தொடங்கி விடும்.
🦇காட்டில் எவரும் பெரியவரும் இல்லை; எவரும் சிறியவரும் இல்லை’ என கடவுள் அறிவித்தார். அதன்படி பறவைகளும் விலங்குகளும் இணைந்து வாழ்வதற்கு சம்மதித்தன.
🦇பறவைகளும் விலங்குகளும் ஒன்றுகூடி கடவுளிடம் தெரிவித்தன: ‘சுயநலத்தோடு இனத்தை காட்டிக் கொடுத்த வெளவாலுக்கு இனி காட்டில் இடம் தரமுடியாது; இடிந்த கட்டிடங்களில் இருட்டில் தலைகீழாகத் தொங்கி வாழட்டும்!’
🦇அதைக் கேட்ட கடவுள் சொன்னார்: ‘துரோகிக்கு இதுதான் சரியான தண்டனை!’
🦇விலங்குகளும் பறவைகளும் ஒன்றுசேர்ந்து வெளவாலைக் காட்டை விட்டு வெளியே துரத்தின.
தன் இனத்தைக் காட்டிக் கொடுத்து சுகமாக வாழ நினைத்தால், கடைசியில் தாமே ஓர் நாள் விரட்டியடிக்கப்படுவோம் என்பதையே இக்கதை உணர்த்துகிறது.
🦇துரோகத்தால் வெளியேற்றப்பட்ட வவ்வால்கள் இடிந்த கோயில்களிலும் கட்டிடங்களிலும் வாழ்கின்றன.

Comments
Post a Comment