இது ஒரு பர்மீயக் கதை.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் , ஒரு நாள் பர்மாவிருக்கு அருகே பர்மிஸ்ட் என்ற தீவிலிருந்து மூன்று பேரை கட்டுமரக் காரர்கள் பிடித்து வந்து அரசவையில் நிறுத்தினார்கள். அந்த மூன்று பேரில் ஒரு பெண்ணும் இருக்க , அரசர் அவர்களை பார்த்துவிட்டு " இந்த மூன்று பேரும் என்ன குற்றம் செய்தனர்? " என்று கேட்டார்.
அமைச்சர் ," அரசே.. இதை முதலில் நிற்கிறானே அவன் மக்களின் பணத்தையும் பொருட்களையும் கொள்ளையடித்தவன் , இந்த பெண் ஒரு சூனியக்காரி, மக்களை பயமுறுத்தி அவர்களை ஏமாற்றி பணம் பிடுங்கினாள். இதோ இவன் சரியான குறும்புக்காரன். மக்களிடம் குறும்பு செய்து அவர்களிடம் சண்டை மூட்டி அதில் சந்தோசம் கான்கிறவன். " என்றார்.
இதைக் கேட்ட மன்னர், தன் நிதியமைச்சரை அழைத்து , “அமைச்சரே! நமது கஜானாவிலிருந்து ஆயிரம் பொற்காசுகளைஇந்த கொள்ளைக்காரனுக்கும், சூனியக்காரிக்கும் கொடுத்துவிடுங்கள்.. அவர்கள் இருவருக்கும் இருப்பிடம் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்யுங்கள். வறுமையால் இவர்கள் குற்றம் செய்தனர்.அந்த வறுமையை நாம் ஒழித்துவிட்டால் இவர்கள் இனி குற்றங்கள் செய்ய மாட்டார்கள்” என்றார் மன்னர்.
கடைசியாக நின்ற குறும்புக்காரன் திருதிருவென விழித்துக் கொண்டிருக்க , அவனைக் கண்ட அரசர், “அந்த இருவரின் குற்றங்களுக்கு வறுமை ஒரு காரணமாக இருந்தது. அதைச் சரி செய்துவிட்டால் அவர்கள் திருடவோ, ஏமாற்றவோ மாட்டார்கள். ஆனால் நீயோ அப்படியல்ல; குறும்புக்காரன். எப்போதுமே குறும்பு செய்து கொண்டுதான் இருப்பாய். அதனால் உனக்கு கண்டிப்பாக தண்டனை உண்டு” என்று கோபமாகச் சொன்னார் மன்னர்.
காவலாளிகளை அழைத்து “இந்தக் குறும்புக்காரனை கடற்கரைக்கு அழைத்துச் சென்று அவன் தலையை வெட்டுங்கள்” என்று ஆணையிட்டார் மன்னர்.
காவலாளிகளும் அதன் படியே செய்தனர்.
தண்டனை நிறைவற்றப்பட்டுவிட்டதா என்று பார்க்க வந்த அமைச்சர் , அங்கே தலை வெட்டப் பட்ட பின்பும் உடல் கீழே விழாமல் நின்று கொண்டிருப்பதை கண்டார். தலை தன் வாய் திறந்து பேச ஆரம்பிக்க அதிர்ச்சியானார் .
“எனது வெட்டப்பட்ட இந்த உடல் கீழே வளைந்து விழுவதற்குள் உனது மன்னரை என்னை வந்து பார்க்கச் சொல். இல்லையென்றால், அவர் தலையை இதேபோல் வெட்டுவேன். விரைவாக போய்ச்சொல்... ம்... ஓடு...ஓடு..” என்று சொல்லி “ஹா...ஹா...ஹா...” என்று மிரட்டும் வகையில் சிரிக்க அமைச்சர் பயந்து போய் மன்னரைத் தேடி ஓடினார்.
பதறிய முகத்தோடு வந்த அமைச்சரைக் கண்ட அரசர், “அமைச்சரே… என்ன ஆயிற்று? ஏன் உங்களுக்கு இப்படி வியர்த்துக்கிறது. தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டதா, இல்லையா?” என்று கேட்டார்.
அமைச்சரும் அங்கு நடந்தவற்றை கூறினார்.
ஆனால் அரசரோ அதை நம்பாமல் “நீங்கள் பயத்தில் எதேதோ உளறுகிறீர்கள்.” என்றார்.
“இல்லை.. இல்லை.. மன்னா, நான் சொல்வது அனைத்தும் உண்மைதான். தயவுசெய்து நம்புங்கள். இல்லையென்றால் என்கூட யாரையாவது அனுப்புங்கள். அப்போதுதான் நான் சொல்வது உண்மை என்பதை நீங்கள் நம்புவீர்கள்” என்று அமைச்சர் கெஞ்சிக் கேட்டார்.
இதை ஏற்றுக்கொண்ட மன்னர், கூடவே ஒரு பணியாளை அனுப்பிவிட்டு பின்பு அவரும் அங்கு சென்றார்.
மூவரும் அந்த இடத்தில் வந்து நிற்க, அந்தத் தலை அங்கே அமைதியாக இருந்தது. உடல் சரிந்து கீழே கிடந்தது. அமைச்சரைக் கோபமாகப் பார்த்த மன்னர், “நீங்கள் சொன்னது பொய் என்பது நிரூபணம் ஆகிவிட்டது” என்று ஆத்திரமாகக் கூறினார். “குற்றம் யார் செய்தாலும் குற்றமே. பொய் சொன்ன குற்றத்திற்காக அமைச்சரின் தலையை வெட்டுங்கள்” என்று பணியாளுக்கு ஆணையிட்டார் மன்னர்.
அதன்படியே பணியாள் அமைச்சரின் தலையை வெட்டி வீழ்த்தினார். அப்போது பயங்கர சிரிப்புச் சத்தம் கேட்க, அதுவரை அமைதியாக இருந்த அந்தத் தலை இப்போது பெருங்குரலில் சிரித்தது.
“மன்னரே! நான் இறந்துவிட்டாலும், என்னுடைய சேட்டைகளும் குறும்புகளும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்” என்று சொல்லி சிரித்துக்கொண்டே இருந்தது அந்தத் தலை.
தான் மிகப் பெரும் தவறு செய்துவிட்டதை உணர்ந்த அரசர், அமைச்சரை எண்ணி மிகவும் வருந்தினார். இதுபோன்ற பல தொந்தரவுகள் இந்தத் தலையால் வரக்கூடும் என்று நினைத்த அவர், பணியாளை அழைத்து,
“ஆழமாகக் குழிதோண்டி இந்தத் தலையைப் புதைத்துவிடு” என்று ஆணையிட்டார்.
அதன்படியே பணியாளனும் செய்தான். சில மாதங்கள் கழிந்தன.
குறும்புக்காரனைப் புதைத்த இடத்தில் மரம் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதில் பல காய்கள் கொத்துக்கொத்தாய் காய்த்து நின்றன. அந்தக் காயை பர்மிய மக்கள் ‘கான்-பின்’ மரம் என்று அழைத்தார்கள். இந்தப் பெயரே பின்னாட்களில் ‘ஆன்-பின்’ என்றாகிப்போனது. அதுதான் தென்னை மரம்.
நீங்கள், அந்தக் காயைக் கையில் எடுத்துக் குலுக்கினால், ஒரு சலசலப்பு சத்தம் கேட்குமில்லையா? அந்தச் சத்தம் உங்களை விளையாட அழைக்கும். அந்தக் காய்தான் குறும்புக்காரனின் தலை. நெடிதுயர்ந்த தண்டுதான் அவனது உடல். அன்றுமுதல் இன்றுவரை அந்தச் சலசலப்புச் சத்தம் அலையோசையோடு சேர்ந்து கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது.
தவறுக்கு தண்டனை கிடைத்த போதும் பல சமயங்களில் தண்டனைக்குரியவன் தன் இயல்பை மாற்றிக் கொள்வதில்லை.. திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது..

Comments
Post a Comment