🌳 குலத்தலைவன் அரசனாகிய கதை.
Source: வீர யுக நாயகன் வேள்பாரி
படைப்பு: திரு. சு. வெங்கடேசன்
திரு. சு.வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி கதையில் இருந்து சில சுவாரசியமான பகுதிகள் மட்டும் இங்கே பதிவிட்டுள்ளேன்.
மனிதனின் பேராசைக்கும் இயற்கைக்கும் இடையே இன்று நடந்து கொண்டிருக்கும் பெரும் போராட்டத்தின் ஆதிவடிவம்தான் வேள்பாரியின் இந்த கதை. திரு .சு. வெங்கடேசன் அவர்களின் எழுத்தில் காட்சிகள் கண் முன்னே நிற்கும். பாரியை அறியும் முன் நம் பூர்வீகம் அறிவோம்.
சுமார் முன்னூறு ஆண்டுகாலக்கு முன்பான கதை இது, அக்காலத்தில் வடவேங்கடம், தென்குமரி என்று தமிழ் நிலத்துக்கு என்று எல்லையோ, பெயரோ உருவாகிவிடவில்லை. மக்கள் அடர்ந்த வனத்திலும், ஆற்றுப்படுகையிலும், வண்டல் பூமியிலும், வற்றிய பாலையில், கடலோரத்தில், மலைமுகட்டில் என்று வெவ்வேறு வகையான நிலங்கள்தோறும் இனக்குழுக்களாகச் சேர்ந்து , தங்களின் குலமுறைப்படியான வாழ்வை நடத்திக்கொண்டிருந்தனர். அன்று அரசு, அரசன் என்று யாருமில்லை.குலத் தலைவன் மட்டுமே குலங்களை வழிநடத்திக் கொண்டிருந்தான்.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இனக் கூட்டம் தங்களின் தனித்த அடையாளங்கோடு செழித்திருந்தனர். இயற்கையோடு ஒன்றிய வாழ்வு. அன்றைய தேவை மட்டுமே அவர்களது ஆசையாகவும் கனவாகவும் இருந்தது. உழைப்பும் விளைச்சலும் பொதுச் சொத்தாக கருதப்பட்டது. கொண்டாட்டமும் குதூகலமும் இயல்பிலயே அவர்களிடம் இருந்தது. இயற்கையாக அமைந்த ஆண், பெண் என்ற பாலினப் பிரிவினை தவிர எல்லா மனிதனும் சமமாக பார்க்கப்பட்டனர்.
உணவை வேட்டையாடி அதை நெருப்பில் சுட்டு தின்றுகொண்டிருந்தபோது, குகையில் இருந்த பெண்கள் ஓய்வு நேரத்தில் நீரைக் கொதிக்கவைத்து இறைச்சியை, மாமிசத்தை, கிழங்குகளை நெருப்பில் சுடாமலே உண்ணக்கூடிய பக்குவத்துக்கு அவர்கள் அதில் வேகவைத்தனர். வேகவைத்த உணவு என்ற புதியதொரு வகையை உருவாக்கினர்.
நெருப்பில் சுட்ட உணவுகளுக்கு `ஆண் உணவு' என்றும் கொதிநீரில் வேகவைக்கப்பட்ட உணவுகளுக்கு `பெண் உணவு' என்றும் பெயர் ஆயிற்று. அன்றே ஆண், அவசரத்தின் அடையாளமாகவும் பெண், பக்குவத்தின் அடையாளமாகவும் அறியப்பட்டனர். உணவு, தாவரங்கள், விலங்குகள், பறவைகள், மலைகள், நதிகள் என எல்லாமே மனிதனைப்போலவே ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கின்றன என்று எண்ணினர்.
இயற்கையின் அதிஅற்புதங்கள் யாவும் எதிர்பாலினத்தின் மீதான வசீகரத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது. காதலுக்குள்தான் இயற்கையின் இயங்குசக்தி பொதிந்துகிடக்கிறது. ஆண், பெண் என்ற இரு சக்திகள் , ஒன்றை ஒன்று முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத ஆதி ரகசியங்களை தன்னுள்கொண்டுள்ளது. நீரும் மண்ணும்போலத்தான் ஆணும் பெண்ணும். நொடி நேரத்தில் ஒன்றினுள் ஒன்று கலக்கவும் , மறுநொடியே ஒன்றைவிட்டு மற்றொன்று விலகவும் முடியும்.
இயற்கை உருவாக்கிய ஒரே ஒரு பிரிவினை இந்த ஆண் பெண் அன்றி வேறெந்த பிரிவினைகள் இல்லாமல் அழகாகவும் அமைதியாகவும் இருந்த அந்தக் காலத்தின் அமைதி நீண்டு நிலைக்காமல் , மெல்ல குலைய ஆரம்பித்தது.
மனிதன் தனக்கான உடமை, தனது சந்ததிக்கான சேமிப்பு என ஆரம்பித்தபோது, குலங்களின் அமைதி குலைய ஆரம்பித்தது; ஏற்றத் தாழ்வுகள் உருவாகின; குலங்களில் வலுத்தவனின் கை ஓங்கியது; வல்லமை பொருந்தியவனின் கைகளில் அதிகாரம் நிலைகொண்டது. வலிமையடைந்த குலம் பிற குலங்களை அடக்கியாள நினைத்தது. தமிழ் நிலத்தின் ஒவ்வொரு மூலையிலும் நூற்றுக்கணக்கான குல மக்கள் ஒருவரோடு ஒருவர் மோதத் தொடங்கினர். பெரும் அடர்ந்த வானாரகத்தில் இடைவிடாது கேட்கும் இடியோசை போல, அம்மோதல்களின் ஓலஓசை கேட்டுக்கொண்டே இருந்தது. நூற்றாண்டுகளாகக் இரத்த ஆறு நிற்காமல் ஓடியது.
கால்நடைகள் தான் ஆதி காலத்தில் மனிதனுக்குத் தேவையான பெரும் செல்வமாக இருந்தன. எனவே, கால்நடைகளை பெருக்குவதற்கு எல்லா குலங்களும் ஆசைப்பட்டனர். அடுத்த இனக் குழுவின் கால்நடைகள் இரவோடு இரவாகக் களவாடினர். களவு கொடுத்தவன் ஆயுதங்களோடு சண்டைக்கு வந்தான். கலவாடிச் செல்லப்படும் கால்நடைக்கும், அதை மீட்டுத்திரும்பும் கால்நடைக்கும் இடையில் மனித இனம் மாய்ந்துகொண்டே இருந்தது..
கால்நடைகளை அடுத்து , நல்ல விளைநிலங்களைக் கைப்பற்ற குலங்கள் மோதிக்கொண்டன. எங்கெல்லாம் செழிப்பான விளைநிலங்கள் இருக்கிறதோ, அங்கே மனித ரத்தம் கசிந்தது கொண்டே இருந்தது. கால்நடைகளைப் பறிக்கும்போது மோதலாக இருந்தது நிலங்களை கைப்பற்ற போர்களாகப் பரிணமித்தது. ஒரு போர் இன்னொரு போரை உற்பத்திசெய்தது. ஆரம்ப காலத்தில் தோல்வியடைந்த நாட்டின் வீரர்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். பிறகு, அவர்கள் அடிமைகளாக்கப்பட்டு பூட்டப்பட்டனர். தோற்றவன் நிலத்தை வென்றவன் வாள்கொண்டு உழுது பயிரிட்டான். `பிறர் மண் உண்ணும் செம்மலே’ என்று அவர்கள் போற்றப்பட்டனர்.🤔
தொடக்கத்தில் , நிலத்துக்காக என்று தொடங்கிய போர் பிறகு, அடிமைகளைப் பெறுவதற்கானதாக மாறியது. போர் எனும் நிரந்தரமான கொதிநீர்க் கொப்பரைக்குள் எண்ணிலடங்கா இனக் குழுக்கள் விழுந்து, ஒன்றோடு ஒன்று மோதி, அழித்து, கொன்று, செரித்து, மிஞ்சியவை மேலேறின.மேலேறியவர்கள் தாங்கள் இனி குலத்தலைவர்கள் அல்ல, வேந்தர்கள் , அரசர்கள் என்று அறிவித்தனர். அரசனுக்கு என்று தனிப் பட்ட அடையாளங்களை உருவாக்கினர். மணிமுடி, அரச முரசு, வெண் கொற்றக்குடை, ஆணைச்சக்கரம் இவை அரசர்களுக்கு உரியன என்றனர். அரசர்கள் என்றால் அது சேர, சோழ, பாண்டியராகிய மூவர் மட்டுமே என்றும் மற்ற எல்லோரும் குறுநில மன்னர்கள் என்றும் அறிவித்தனர்.காவிரி, வைகை, பேரியாறு என ஆற்றங் கரையில் மூவேந்தர்களின் நாடுகள் அமைந்தன.
குடவர், அதியர், மலையர், வேளீர் என இருபதுக்கும் மேற்பட்ட குலத் தலைவர்கள் மூவேந்த்களின் அறிவிப்பை ஏற்க்க மறுத்தனர். வாளேந்தி வஞ்சினம் உரைத்து சுதந்திர இனக் குழுக்களாக மலை மற்றும் காடு சார்ந்த நிலப்பகுதியை ஆண்டு கொண்டிருந்தனர்.
காட்டை யாரும் ஆள முடியாது. காடுதான் நம்மை ஆட்கொள்ளும் என்று அன்றே பாரி உரைத்ததை மதிக்காமல் இருந்ததன் விளைவாக தான் மனிதன் இன்று பல நோய்களை பரிசாக பெற்று இருக்கிறான் போலும்.
அடுத்த பதிவில் வேறொரு சுவாரசியமான கதைப் பகுதியை காண்போம்..
நன்றி😊🙏

Comments
Post a Comment