✍️
நரந்தம் புல்வெளியில் வள்ளியின் முருகன்.
வள்ளியை பின் தொடர்ந்த முருகன் அந்த பெரும் பாறைய திரும்ப அடுத்த கணம் மெய்மறந்து நின்றான். பெருவட்ட வடிவில் மலைகள் சூழ்ந்திருக்க வான் உயர்ந்து நின்ற அடர்மரங்களைக் கொண்ட அந்த மலலையின் நடுவே பரந்து விரிந்திருந்த அந்நிலப்பரப்பு முழுதும் நான்கடி உயரத்தில் விளைந்து நின்றது அப்புல்வெளி. இமைக்காமல் பார்த்திருந்த அதன் அழகு பார்க்க பார்க்க பெருகிக்கொண்டே இருக்க அச்சூழலில் காற்றில் தவழ்ந்து வந்த அந்த மணம் அவனுள் மெல்லிய மயக்கத்தை கடத்தியது.
“எத்தனை நேரம் பார்த்தாலும் இந்த அழகை விட்டு நம் பார்வை பிரியாது. ” என்றாள் வள்ளி.
வள்ளியின் குரல் கேட்டும் திரும்பாமலே முருகன் கேட்டான், “இந்த இடத்தில் எதோ ஒரு கண்டுகொள்ள இயலா மயக்கம் சூழ்கிறதே. இவ்விடத்தில் இருப்பது என்ன?”
" இந்த புல்லின் பெயர் நரந்தம் , யாரையும் மாயக்கிவிடும் இதன் மணம் , கயக்காய அதிகரித்துக்கொண்டே போகும். கடலுக்குள் உள்ள உப்பு போல் இந்த நரந்தம் புல்வெளியில் நறுமணம் தேங்கி கிடக்கிறது. " என்று கூறிக்கொண்டே முருகனின் கைப்பிடித்து அப்புல்வெளிக்குள் நுழைந்தாள் வள்ளி.
புல்வெளியில் நடக்க நடக்க அவர்கள் கால் பட்டு நசுங்கி அங்கிருந்து கிளர்ந்த மணம் அவர்களின் மனதையும் மயக்கி கிளர்ச்சியூட்ட இருவரது உடலும் உள்ளமும் காற்றாய் மிதந்து காடெங்கும் காதலில் கசிந்தது உருகி பெருகிக் கொண்டிருந்தது.
காதலின் துடிப்பு உள்ளத்தில் பெருக இருவரும் முழு மயக்கத்தில் இருந்த போதும் முருகனின் ஆழ்மனம் விழித்திருக்க , ' இது என்ன மயங்கியும் மயங்காத ஒரு நிலை. காதலை தவிர வேறேதும் மனதில் இல்லாத நிலை.. '
மயக்கம் தெளியத் தெளிய மீண்டும் மீண்டும் மீளா ஆழ்மயக்கத்துக்குள் செல்வது போல் இருக்க வள்ளி முருகனுடன் நரந்தம் புல்வெளியின் நடுவே இருந்த ஒரு சிறுமேட்டிற்கு செல்ல அங்கு வள்ளி அமர்ந்த நொடிதனில் அவள் மடி சாய்ந்தான் முருகன்.
ஏதோ சொல்ல வந்து பின் சொல்ல வார்த்தையின்றி அமைதியாய் முருகன் முகம் ஏந்தி அமைதியாக இருந்த வள்ளியின் முகம் பார்த்தே முருகன் புரிந்து கொண்டான்.
‘ஏழிலைப்பாலை மரத்தின் அணுக்கத்தில் கணநேரம் உன்னை நிறுத்தி அதை மலரவைத்தேன். ஆனால் நீயோ, காலம் முழுதும் என்னை மலர்ந்தது கொண்டே இருக்கச் செய்கிறாய். என் நிலமகளே எனைநோக்கி நீ கடத்தும் இந்த காதலை எதிர்கொள்ள என்னால் முடியவில்லை. உன்னுள் நுழைந்த நன் நறுமணமாய் நான் உனக்குள் மறைந்து போகிறேன். '
சுற்றிலும் நரந்தம் புல்வெளி. அதன் நடுவே சிறுமேடு.. அந்த மேட்டில் முருகனும் வள்ளியும் வானம் பார்த்துப் படுத்திருக்க கருத்திருந்த வானில் எங்கும் விண்மீன்கள் ஒளிவீசிக்கொண்டிருந்தன ..
“இந்த இடத்தில் துணையோடு வரும் உயிரினங்கள் மட்டுமே இருக்க முடியும். நரந்தம் புல் கிளர்த்து பரப்பும் மணத்தில் பறவைகளும் விலங்கினங்களும் நீங்கா மயக்கத்தில் காதலில் திளைத்திருக்கின்றன .” என்றாள் வள்ளி.
"புலிகளுடன் புள்ளிமான் தன் இணையோடு இரை உண்ணும் விந்தையை இங்குதான் காண்கிறேன்."
விண்மீன்களைப் பார்த்தபடி இருவரும் பேசிக்கொண்டிருக்க , முருகன் “வளைந்தோடும் ஆறு போல இருக்கும் அந்த விண்மீண் கூட்டம் பார்” என்றான்.
வள்ளி எங்கே என்று கேட்க ,விரல் நீட்டி அதன் வளைவுகளை சொல்ல, நீண்டநேரம் அந்த விண்மீண் கூட்டத்தை கண்டாள் வள்ளி.
“செங்கடம்பு மாலை அணிந்து முருகன் படுத்திருக்க அதன் மணம் வள்ளியின் மேனி எங்கும் வீசியது. மாலை அணியாமலே தன் உடலில் மணக்கும் செங்கடம்பு வாசனை நுகர்ந்தபடி ,முருகனின் மேனியில் இருந்த உதிராத இதழ்களோடு சென்கடம்பு மாலையை பார்த்தபடி " மாலை மார்பன் " என்றாள் வள்ளி.
"மாமலர் கோதை நீ " என்றான் முருகன் , மனதில் எழுந்த பெருங்காதலோடு ..
" அழகின் முழுவடிவு நீ " என்று நாணி குழைந்தாள் வள்ளி.
" எனில் ,வடிவின் அழகு நீ.”இதழ் முத்தம் போல் அவள் தந்ததை திருப்பி அவளிடமே தந்தான் .
செங்கடம்ப மாலை வள்ளியின் மேல் இடம் மாற்றம் அடைய இமை சொருகி “அந்த விண்மீன்களின் வளைவை என்மீது சுற்றுவது போல் இருக்கிறது உனது விரல்களின் தொடுதல்.” என்று கூற முருகனின் மூச்சுக் காற்று மட்டுமே பதிலாய் வரக் கண்டு, “அனலெரியும் காதல் என்னுள் ஒளியுருக்கி ஊற்ற எனை அச்சம்கொள்ளவைக்கிறது இந்த அணைப்பு.”
அணைப்பை நீங்கி “மலைமகள் அச்சம் கான்பாளோ.”முருகன் கேட்டான்.
“வேலன் மிச்சம் காணான்.”
மூடிய இமைகள் திறவாமல் பதில் சொன்னாள்.
“காதலில் நான் வேலன் அன்று.”
“வேட்டையில் மறைந்து கொள்வது உனக்கு ஒன்றும் புதிதல்ல.”
“நான் உனக்குள் மறைந்து கொள்கிறேன் என்னை நீ கண்டறியாதே.”வள்ளியின் சொல்லுக்கு சில நொடிகள் கழித்து முருகன் பதில் சொன்னான்.
“சரி, ஆனால் என்னைக் கண்டறிய உன்னைப் பின்தொடர்வேன். மறைப்புகள் விலக்கி உன்னுள் புதைந்தெழுவேன்.” என்றாள் வள்ளி..
கார்காலம் முழுதும் இந்த மறைதலும் தேடலும் தொடர்ந்து கொண்டே இருந்தது. பருவநிலை மாறத் தொடங்கியது. மேகத்தில் தூசி மாறி தும்மல் தொடங்க முகில்களின் கொட்டம் தொடங்கியது. வேப்ப முத்து அலவினாளன பெரு மழைத்துளிகள் கொட்டித்தீர்ந்தன. ஒவ்வொரு துளி நீருக்குள்ளும் நரந்தம் புல்லின் மணமேறி மழை நீரின் துளிகள் வள்ளிமுருகனின் வாசனையைக் கொண்டன.
புல்வெளியை சுற்றியிருந்த மலைமுகடுகளில் . கொடிமலர்களும் கொத்து மலர்களும் வண்ணம்வீசி பூத்துக் குலுங்கின. கொட்டும் மழையில் பாறைக் குகையினுள்ளும் , மழை நின்ற பொழுதுகளில் நரந்தம் மேட்டில் முருகனும் வள்ளியும் பொழுதைக் கழித்தனர்..
நன்றி: சு.வெங்கடேசன் இயற்றிய வீரயுக நாயகன் வேள்பாரி(ஆனந்த விகடன்)
Comments
Post a Comment