Skip to main content

கார்த்திகை - பெயர்க் காரணம் தெரியுமா.. முருகன் வள்ளியின் முடிவிலா பயணம். கதைக்களம்#7

 🌼🏞️🌳🌾🌊🏜️

முடிவிலா பயணம் கார்த் தீ - யை கண்டது.

கார்காலத்தின் நரந்தம் புல்வெளியில் முருகன் வள்ளியுடன் இருந்த காலத்தில் மழை இல்லா இரவுகளில் மின்னும் விண்மீன்களின் அழகை பார்த்துக்கொண்டே இருந்தான். 

நிலவு ஆறு புள்ளிகளை கொண்ட வளைந்து கிடந்த அந்த விண்மீண் கூட்டத்திற்குள் இருக்கையில் வியத்தகு ஒளி இணையாய் அவை விண்ணில் இருந்தன. அவ்விணை கூடியதும் மேகங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து கொட்டும் மழையாக நிலம் நோக்கி பொழிந்தது.  

இப்படியே அவர்களது நாட்கள் கடந்தது, 

மழையின்றி மேகங்கள் இல்லா நள்ளிரவுகளில் முருகனின் கண்கள் அந்த ஆறு விண்மீன் கூட்டத்திலுருந்து விலகி பயணிக்கும் நிலவின் பாதையையே கண்டு கொண்டிருந்தன.

மழை நின்ற ஒரு அதிகாலையில் , குகையிலிருந்து வெளி வந்த வள்ளி அங்கு பூத்துக் குலுங்கும் ஆறு இதழ்களோடு செவ்வொளி வீசும் செங்காத்தள் மலர்களை முருகனிடம் காட்டினாள்.

“இந்த மலர் அவ்விண்மீன் கூட்டத்தின் சுடர் போல் ஆறு இதழ்களைக் கொண்டுள்ளது” என்றாள்.

மலரின் இதழின் அடியில் இளம்பசுமை நிறத்திலும் , நடுவில் மஞ்சள் கலந்த வெண்மையிலும், மலரின் மேற்பகுதி இளஞ்சிவப்பாகவும் அதன் பூண்டுமுனை அடர்சிவப்பாய் இருக்க ,“ஆறு விண்மீண்களின் குணமும் இந்த மலரின் ஆறு இதழ்களிலும் இருக்கின்றன” என்றான் முருகன்.

 “இந்த மலரின் நிறங்கள் அனைத்தையும் காதலில் நாம் திளைத்திருக்கும் தருணங்களில் உன்னிடமும் கண்டுள்ளேன்.” 

வள்ளி வியப்பாக பார்த்தாள், “எனில் , நீ விண்ணைக் காணும் பொழுதுகளிலும் என்னைத்தான் கண்டாயா?”

“நீயின்றி நான் காண விண்ணேது? மண்ணேது?” என்றுரைத்த படி செங்காந்தள் மலரை வள்ளிக்கு சூட்டினான்.

அந்த ஆறு விண்மீன்கள் கூட்டம் விட்டு நிலவு விலக, கார்காலத்து அடைமழை நிற்கத் தொடங்கியது. 

முருகனுடன் செங்காந்தள் மலர் சூடி வள்ளியும் நரந்தம் புல் பரப்பில் இருந்து விலகி புது இடம் நோக்கி சென்றனர். 

குறிஞ்சி நிலம் நீங்கி முல்லை நிலம் நோக்கி அமைந்தது முருகன் வள்ளி பயணம். 

மலையின் அடிவாரக் காட்டு பகுதி வந்தடைந்தனர் முருகனும் வள்ளியும். அடைமழைக் காலம் தொடர்ந்து முன்பனி காலம் தொடங்கியிருக்க அந்த முன்பனிப்பொழுதில் தங்குவதற்குக் கொன்றை மரங்கள் அடர்ந்து கிடக்கும் இடுக்கினையும், சற்றே குளிர் குறைந்திருக்கும் பின்னரவில் படுத்துறங்க கருங்கொன்றை மரத்தின் உச்சியில் பரண் அமைத்து தங்கினர். 

இரை தேடி முருகன் வேட்டைக்கு சென்ற சமயம் 

பனியின் குளிர் தாங்காமல் , கொன்றை மர இடுக்கில் வள்ளி தன் கால்களை குறுக்கி அமர்ந்திருக்க அவளின் கணப்பில் முயல்கள் வந்து அண்டிக்கொண்டன. 

வேட்டை முடிந்து பரண் திரும்பிய முருகன் , முயல்கள் வள்ளியின் கணப்பில் அண்டியிருப்பதைக் கண்டு முயல்களிடம் , 

 “அவ்விடம் அண்டாதீர்கள். பின் எப்போதும் அவ்விடம் அகலமாட்டீர்.” 

சொல்லில் புலப்படாத பொறாமை அவன் பார்வையில் வெளிப்பட்டதுவோ.. முயல் குட்டிகள் சில வள்ளியின் மேல் ஏறி பதுங்கிக் கொண்டன. 

நீளமான கொன்றைக்காயின் விதைகளை துளையிட்டு எடுத்து அதை இசைபாடும் குழலாய் மாற்றி இசைக்க தொடங்கினான். முன்பனி பொழியும் அந்த காலததிலும், கொன்றை மர பரணில் படுத்தபடி வானில் நகர்ந்து கொண்டே இருக்கும் ஆறு விண்மீன்களையும் தவறாமல் பார்த்துவந்தான்.

முல்லை நிலத்தின் ஈங்கை மலர் எடுத்து வள்ளியின் கூந்தலில் சூட்டிய நாள் , காடு விட்டு விலகி செல்ல போகிறோம் என்று வள்ளி புரிந்து கொண்டாள். 

முன்பனி காலம் முல்லையில் , பின்பனி காலம் மருதத்தில்… 

கொட்டும் பின்பனியில் உதடுகள் நடுங்க வயல்வெளியில் முருகனோடு வள்ளி நடந்தாள். 

இம்முறை , தாமரை படர்ந்திருந்த ஒரு குளக்கரையில் மருத மரத்தின் மேல் பரண் அமைத்தான் முருகன்.

“ஏன் எங்கு சென்றாலும் பரண் மீதே தங்குகிறோம்?” வள்ளி.

“ தரையில் தங்கினால் இறுகிய நிலத்தில் இந்த காதல் வாழ்க்கையின் கூடலின் வளம் முழுமையடையாது. வானில் மிதந்தாலும் கூடலின் இறுக்கம் வலிமை கொள்ளாது.அதனால் தான் இரண்டும் கலந்த பரணில் நம் வாழ்வு. நிலம் கீழே , வான் மேலே , நடுவில் நாம் ….” 

மருத நிலத்தின் குளக்கரையில், அந்த மருத மரப் பரணில் மலரும் காதல் கண்டு நாரைகளும் மற்ற பறவைகளும் தம் இறகுகளை உதிர்த்து போக, அதை சேகரித்து வென்சாம்பல் இறகுகளை கட்டி வள்ளிக்கு மகுடமாக சூட்டி மகிழந்தான்.  

அடுத்து இந்த காதல் பறவைகளின் பயணம் அடுத்து மருதம் நீங்கி நெய்தல் நோக்கி அமைந்தது 

பின்பனி காலத்தின் மலரான கமுகின் சிறு பூவை வள்ளிக்கு சூட்டி வயல் நீங்கி கடல் நோக்கி புறப்பட்டனர் வள்ளியும் முருகனும்.

நெய்தல் நிலத்தின் கடற்காற்று மேலேறி வர எதுவாக தாழை மரங்களுக்கு இடையே ஊஞ்சல் பரண் அமைத்தான்.  

 “கரையில் இருந்து கொண்டே அலையினில் மிதக்கிறோம் நாம் " வள்ளி.

“மலையினிலும் காட்டினுலும் வயல்வெளியிலும் கூட நாம் மிதந்து கொண்டு தானே இருந்தோம் ” முருகன்.

“எனினும் இந்த உப்புக் காற்று உடல் தழுவ இளவேனில் உடல் சுடுகிறது. இவை யாவும் உள்ளுக்குள் மட்டுமே நிகழ்ந்தவை அல்லவா..” வள்ளி.

மௌனம் காதலில் எத்தனை அழகு தெரியுமா. வார்த்தைகள் இல்லா சமயம் தன் துணை தோள் சாய்ந்து மொழியற்ற மௌனம் அழகிலும் அழகு. 

முருகனும் வள்ளியும் ஆடும் பரணில் படுத்தபடி கண் முன்னே நீண்டு பரந்திருந்த கடலை பார்த்தபடியே இருந்தனர்.

நீண்ட நேரத்துக்கு மௌனத்திற்கு பின் ``கடல் ஏன் கரையோடு நின்றுவிடுகிறது?” வள்ளி கேட்டாள்.

“கடல் கரை மீது கொண்டுள்ள காதலால் தான்.”

முருகனின் பதில் அவளை ஏதோ செய்ய “எனில், இத்தனை தழுவல்கள் கொண்ட காதலர்கள் இவர்களின்றி வேறு யாரும் இருக்க இயலாது அல்லவா?” அவளது மனம் தோல்வியை ஒப்புக்கொள்ள இயலாது தவிக்க, அதை கண்டு கொண்ட முருகன் " என்னவாயிற்று? " என்றான் . 

' உன்னையும் என்னையும் விட இவர்கள் சிறந்த காதலர்களோ ' என்று கேட்க முடியாது திணற , முருகனின் கைகள் வள்ளியை தழுவி அவளது தவிப்புக்கு பதிலுரைத்தது. இப்போது கடலும் கரையும் பரணில் இருந்தது.

சுற்றிலும் அலைகளின் ஓசையும் காற்றில் தவழ்ந்து வரும் நீர்த்துளிகளும் என இரவு நீண்டு கொண்டிருக்க சுடு மீனின் சுவையை நாவில் உணர்ந்தபடி விண்மீன்களைப் பார்த்திருந்ததனர்.

நெய்தல் நீங்கி பாலை செல்லும் நேரம் வந்ததோ…

 இளவேனில் காலத்தில் கடற்கரை மணலில் பூத்திருந்த நீல நிற முல்லை மலர் பறித்து பரண் வந்தான் முருகன். பாலை நிலம் செல்ல ஆயத்தமாக இருந்தாள் வள்ளி. 

பாலையின் சுடும் மணலில் வள்ளியின் பாதங்களில் கொப்பளங்கள் பூக்க இடைவிடாது நடந்தாள். சுட்டெரிக்கும் பாலை நில மண்ணில் எங்கோ ஒரு மூலையில் பூத்திருக்கும் சிறு மலர் கண்டு வள்ளியின் மணம் மலர்ந்தது. 

பாலை நிலத்தின் பின்கோடை காலம் தான் தாவரங்களை மலரச்செய்கிறது. 

அழிச்சி, அலரி, சுள்ளி, எருக்கு என மலர்கள் அங்கொன்று இங்கொன்று என பூத்திருக்க பறவை கூட்டங்கள் இரும்பைப்பூவை தேடியும் வெளவால்கள் இலும்பை மரத்தைவிட்டு விலகாமலும் கிடந்தன. கோங்கின் பொன்னிற தனி மலரும் ஊகம்பூவும் இணைந்தே உதிர்ந்து கிடந்தன.

பாலையின் மண் , மரம், காற்று என அனைத்திலும் சுடுவெயில்.. எத்திசையும் சுடுவெயில் சூழ்ந்த கொடும்பாலையின் நடுநிலம் நோக்கி நடந்தனர் வள்ளியும் முருகனும்.

சுடுமணலின் சூடு தாங்காமல் வள்ளியின் உதடுகள் வெடித்துக்கிடந்தது. நிலமெங்கும் பட்டமரங்களே நின்றிருக்க சிறுபாறையின் ஓரம் தனித்திருந்த வாகை மரத்தின் மீது பரண் அமைத்தான் முருகன். 

பகல் பொழுது சாய்ந்து மாலை மங்கிய நேரம் பரணேறிச் சாய்ந்தனர் இருவருக்கும் இரவானதும் வானமும் சுடகூடுமோ .. என்று அஞ்சவைத்தது அந்த பகல் பொழுதின் நினைவு. 

முருகன் விண்மீன்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். வானில் அந்த வளைந்த ஆறு விண்மீன்களும் இல்லை.

“அந்த விண்மீண் கூட்டம் வான்விட்டு எங்கு போயின?” வள்ளி.

“அவை வான் விட்டு நீங்கவில்லை. எந்த ஒரு வளைவிலும் மறைவுகள் இருக்கும். அதுபோல அந்த ஒளி வளைவின் மறைவிடத்தில் இப்போது நாம் இருக்கிறோம். அதனால் அந்த விண்மீண்கள் நம் பார்வையில் இருந்து தப்பியுள்ளது.” என்றான் முருகன். 

வான்வெளியில் பூத்துக் கிடக்கும் எண்ணிலடங்கா விண்மீண்களை பார்த்துக் கொண்டே கேட்டாள் “மழை பொழியும் கார்காலத்திலும் கோடையிலும் மட்டுமே நிலமெங்கும் மலர்கள் பூத்துக் குலுங்கின.மற்ற காலங்களில் இவ்வளவு மலர்கள் மலர்வதில்லையே ஏன்?”

முருகனின் மறுமொழிக்காக வள்ளி காத்திருக்க  

முருகனின் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றி மறைந்தது. மறுமொழியேதும் வராது போகவே அவன் சிந்தனை இங்கில்லை என நினைத்தாள். 

 “எல்லாவற்றிற்கும் காரணம் ஆறு விண்மீன் கூட்டம்தான்.” சிறிது நேரம் சென்று வந்தது முருகனின் பதில். 

 “ அது எப்படி?” என்றாள் வியப்பாக.

“ நிலவு அந்த ஆறுவிண்மீன் கூட்டத்தோடு இணைந்திருந்த காலம் , கார்மேகங்கள் வானம் எங்கும் நிறைந்து பெருமழை கொட்டித்தீர்த்தது. அதுபோலவே இந்த முதுவேணில் காலத்தில் கதிரவன் அந்த ஆறு விண்மீன் கூட்டத்தோடு இணைந்திருக்க சுடுவெயில் தீயென பொழிகிறது. நீரும் ஒளியும்தான் மலராய் வடிவம் கொள்கின்றன. அதனால்தான் மற்ற பருவ காலங்களை விட கோடையிலும் கார்காலத்திலும் மலர்கள் அதிகமாக மலர்கின்றன. வளைவுகொண்ட அந்த ஆறுவிண்மீன்கள்தான் இந்த மலர்களின் மலர்களின் மலர்தலுக்கு காரணம்..” 

முருகனின் விடை முற்றிலும் புதிதாய் இருக்க , “விண்மீன் கூட்டத்தோடு நிலவு இருந்ததை நாம் பார்த்தோம். ஆனால் இப்பொழுது கதிரவன் அக்கூட்டத்தோடு இருக்கிறான் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?”

“நான் விண்மீனின் நகர்வுகளைக் காலமும் வானில் அவை நகர்ந்து செல்லும் வழித்தடம் எனது மனக்கண்ணில் இருக்கிறது. இப்பொழுது அந்த ஆறு விண்மீண்களோடு கதிரவன் இணைந்தே பயணிக்க வேண்டும். அவைகளின் பயணம் பகல் பயணமாக இருப்பதால் தான் இரவில் அவ்விண்மீன் கூட்டம் நம் கண்களுக்குத் தெரியவில்லை. அதுவே காலச்சுழற்சியின் பாதையும்கூட.. ” 

முருகனின் பதிலில் வள்ளி உறைந்து நின்றாள். 

“உனது முதுகுப்புறத்தை நீ பார்க்கமுடியாமல் போனாலும் உணரமுடியும் அல்லவா? இதுவும் அதுபோல் தான்.” என்றான். 

 “இதுவரை எல்லா இரவுகளிலும் காதலில் மூழ்கதான் வான்நோக்கி பரண் அமைத்தாய் என்று நினைத்தேன். ஆனால் காலத்துள் மூழ்கத்தான் அவ்வாறு பரண் அமைத்தாயோ??”

அழகிய சிரிப்போடு முருகன் சொன்னான், 

“நான் காலத்துள் மூழ்கும் போதெல்லாம் காதலுக்குள்தானே மூழ்கினேன். காதலே காலச்சுழற்சியின் அடையாளம். உன் அணைப்பில் நீங்காமல் இருந்தவனை நீதானே அறிவாய்.” 



காதல் பெருக , செய்வதறியாது நின்றவளின் முகத்தை தனது கைகளில் ஏந்தியபடி “கார்மேகம் மழையைக் கொட்டித் தீர்ப்பதற்கும், வெயில் தீயாய் சுட்டெறிப்பதற்கும் காரணமான இந்த விண்மீன் கூட்டத்தை கார்த் தீ என்று அழைக்கலாமா?”

“உனது கைகள் எனது முகமேந்திய தருணம் உடலெங்கும் கார்காலக் குளுமையும் , விலகி நிற்கும் இவ்விடைவெளியில் பாலைத் தீயும் பற்றி எரிகிறது” வள்ளி முடிக்கும் முன்னே இறுக அணைத்திருந்தான் முருகன்.

கார்காலத்தின் குளுமையில் பற்றியெறிந்து கொண்டிருந்தது தீ. கார்த் தீ!


இதுதான் கார்த்திகை என்ற பெயர் பிறந்த கதை. 

குறிஞ்சியில் தொடங்கிய வள்ளி முருகனின் காதல் பயணம் பாலையில் முடியவில்லை. அது உலகம் உள்ள மட்டும் பயணித்துக் கொண்டே இருக்கும். 

நன்றி: சு. வெங்கடேசன் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி ( ஆனந்த விகடன்)


Comments

Post a Comment

Popular posts from this blog

குறும்பால் முளைத்த தென்னை மரம் - பர்மீய கதை

 இது ஒரு பர்மீயக் கதை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் , ஒரு நாள் பர்மாவிருக்கு அருகே பர்மிஸ்ட் என்ற தீவிலிருந்து மூன்று பேரை கட்டுமரக் காரர்கள் பிடித்து வந்து அரசவையில் நிறுத்தினார்கள். அந்த மூன்று பேரில் ஒரு பெண்ணும் இருக்க , அரசர் அவர்களை பார்த்துவிட்டு " இந்த மூன்று பேரும் என்ன குற்றம் செய்தனர்? " என்று கேட்டார்.  அமைச்சர் ," அரசே.. இதை முதலில் நிற்கிறானே அவன் மக்களின் பணத்தையும் பொருட்களையும் கொள்ளையடித்தவன் , இந்த பெண் ஒரு சூனியக்காரி, மக்களை பயமுறுத்தி அவர்களை ஏமாற்றி பணம் பிடுங்கினாள். இதோ இவன் சரியான குறும்புக்காரன். மக்களிடம் குறும்பு செய்து அவர்களிடம் சண்டை மூட்டி அதில் சந்தோசம் கான்கிறவன். " என்றார். இதைக் கேட்ட மன்னர், தன் நிதியமைச்சரை அழைத்து , “அமைச்சரே! நமது கஜானாவிலிருந்து ஆயிரம் பொற்காசுகளைஇந்த கொள்ளைக்காரனுக்கும், சூனியக்காரிக்கும் கொடுத்துவிடுங்கள்.. அவர்கள் இருவருக்கும் இருப்பிடம் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்பாடு செய்யுங்கள். வறுமையால் இவர்கள் குற்றம் செய்தனர்.அந்த வறுமையை நாம் ஒழித்துவிட்டால் இவர்கள் இனி குற்றங்கள் செய்ய மாட்டார்கள்” என்றார் ...

கவிதை வரையும் ஓவியம்

  அன்று அவள்  கண் மை  எழுதிய கவிதை இன்று கண்ணீரில்  கரைகிறது.. கரையும்  கண்ணீரில் காதலின் வாசம்.. *********************************************************** அனுதினம் வாசலில் அவளிடும்  கோலம்..  ஒரு கவிதை வரையும்  ஓவியம் .  *********************************************************** காலப்போக்கில்  காணாமல் போன  உன் கடைசி  பொழுதுபோக்கு என் காதலோ... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ காலனே கேட்டுக்ககொள்..  காலம் பல கடந்தாலும்,  என் கவிதைகளின்  காப்புரிமை கூட  எனக்கே உரிமையில்லா என்  காதலுக்கு மட்டுமே..   வார்த்தைகள் எனதெனினும் அதன் வதனம் அவளல்லவா!!!

வெளவால் ஏன் தலை கீழ் தொங்குகிறது?? - பர்மீய கதை

🦇‘‘கனவில் கூட துரோகம் இழைக்க மாட்டார் என நட்பின் உறுதியைப் பற்றி கூறுவார்கள். இன்று அதெல்லாம் வெறும் கற்பனை. நம்பிக்கை துரோகம் செய்வது இயல்பாகி விட்டிருக்கிறது.  🦇மனசாட்சி உள்ளவர்கள்தான் துன்பப்படுகிறார்கள். துரோகத்தின் வரலாறு மிக நெடியது.   🦇ஒரு காட்டில் வாழும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் திடீரென ஒருநாள் காடு யாருக்குச் சொந்தம் என்கிற பிரச்சினை உருவானது.  🦇‘காலம் காலமாக மரங்களில் நாங்கள் கூடுகட்டி வாழ்கிறோம். அதனால் காடு எங்களுடையது’ என்றன பறவைகள் . 🦇விலங்குகளோ ‘இது நாங்கள் பிறந்த இடம். காட்டினை நம்பியே நாங்கள் வாழ்கிறோம். ஆகவே காடு எங்களுடையது!’ என்றன. இதனால் சண்டை உருவானது.  🦇ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன. பறவைகள் தங்கள் பக்கம் சண்டையிட வருமாறு வவ்வாலை அழைத்தன.  🦇 வெளவாலுக்கு அதில் விருப்பமில்லை. அது சுகமாக பழங்களைத் தின்றபடியே ‘எனக்கு கண் வலி. இல்லாவிட்டால் நிச்சயம் உங்களுக்காக சண்டைபோட வருவேன்’ என்றது.  🦇‘நன்றி நண்பனே..!’ என பறவைகள் விடைபெற்றன. சண்டையில் விலங்குகள் ஜெயிப்பது போன்ற சூழல் உருவானது.  🦇ஒருவேளை விலங்குகள் ஜெயித்துவிட்டா...