🎭
கொற்றவைக் கூத்து - அகுதை குலத்தின் கதறல்.
பறம்பில் கொற்றவைக் கூத்து நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும்.
கபிலர் பறம்பு வந்தது முதல் அவருக்கு அனைத்துமே புதிராகவே இருந்தது.
கொற்றவைக் கூத்து பொதுவாக பாலை நிலத்துக்கு உரியது.அதை ஏன் இந்த குறிஞ்சி நில மக்கள் நடத்துகிறார்கள்? என்பது தான் அவரது குழப்பமாக இருக்க அதை பாரியிடம் கேட்டார்.
“ பாலை... நிலத்தில் இல்லை. மனத்தில்.. மனம் கொடும்பாலையாக வெடித்துக் கிடக்கையில் கொற்றவை கூத்தை எங்கு நடத்தினால் என்ன?”
பாரியின் பதிலில் கபிலர் திகைத்தார்.
“பறம்பில் நடக்கும் கொற்றவை கூத்து குறிஞ்சிக்கு மட்டும் உரியது அன்று. ஐந்திணைக்கும் உரிய கூத்தாகும்.” என்றான் பாரி.
“ மூவேந்தர்களால் அழிக்கப்பட்ட எத்தனையோ குலங்களின் குருதி ஆறு பலநூறு ஆண்டு காலமாக இம்மண்ணில் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னும் இன்னும் எத்தனையோ ஆதி குலங்கள் அழிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது. அவர்களிடம் இருந்து தப்பி பிழைத்த பதினாறு குலங்கள், எங்கெங்கோ அலைந்து திரிந்து பின் பறம்பில் குடியேறினர்.
அவர்கள் தான் மூவேந்தர்களால் அழிக்கப்பட்ட குலங்களின் மிச்சங்கள் அவர்களின் போர் தெய்வமான கொற்றவையிடம் முறையிட்டு வஞ்சினம் உரைக்கும் விழாதான் கொற்றவை கூத்து.அழிந்துவிட்ட குலத்தின் வரலாற்றை அக்குல பாணர்கள் பாட, இறுதியில் அக்குலத்தின் வழித்தோன்றல்கள் கொற்றவைக்குப் பலியிட்டுச் சூளுரைப்பார்கள்” என்றான் பாரி.
தெய்வவாக்கு விலங்கு ஒன்று தயங்கியபடி கால் எடுத்து கூடைக்கு அருகில் வந்து மூன்றாம் கூடையில் இருந்த இலந்தைப்பழம் இருந்தது.
தெய்வவாக்கு விலங்கு , பறம்பின் மற்றொரு அதிசயம். இயற்கையிலேயே மிகுந்த பயந்த சுபாவம் கொண்ட இந்த விலங்கு எத்திசை திருப்பி போட்டாலும் வடதிசை நோக்கி மட்டுமே அமருமாம். இயற்கை மனிதனுக்கு அமைத்து தந்த திசைகாட்டி..
கூடல் வாசிகள் , வைகை நதிக்கரையில் பயிர் வளர்த்து விவசாயத்தை கண்டறிந்து அறுவடையை அதிகரிக்கச் செய்தனர்.
மருத நிலம் கரிசலும் வண்டலும் கலந்த பொன்னிறமுடையது. கூடல் வாசிகள் வெவ்வேறு மண்ணின் குணங்களை அறிந்து தாவரங்களின் வேர்களை எந்த மண் உள்வாங்கி தன்னோடு அமைத்துக்கொள்ளும் எம்மண் விதையை முட்டி வெளித் தள்ளும் என்பதை அறிந்து வேளாண்மை செய்தனர்.
பறவைகளை ஆசானாக கொண்ட இவர்கள்
தங்களுக்கு வழிகாட்டும் வானம்பாடிகளின் சிறகை முதல் தானியம் நடும் போது அதனருகில் நட்டு நன்றி தெரிவித்தனர். விளைந்த பயிரை தேடி வரும் விலங்குகளை வேல்கொண்டு விரட்டிவிடும் இவர்கள் பறவைகளை விரட்டாமல் அவை உண்ட மிச்சமே நமக்கு எனும் அறம் வகுத்துக்கொண்டனர். இத்தகைய கூடல் நகரை உருவாக்கிய குலத்தின் தலைவன் தான் அகுதை. அவனின் கதையை தான் அன்றைய கொற்றவைக் கூத்தில் பாடினர்.
பாரியின் கண்களில் நீர் திரள , வைகைக் கரையில் வேளாண் நாகரிகத்தை உலகிற்கு அறிமுகம் செய்த அகுதையின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
நாமும் கேட்போம்.
உப்பு விற்கும் உமணர்களுக்கு இந்த நிலமெங்கும் இருக்கும் மனிதக் கூட்டங்கள் பற்றியும் , அவர்களின் வாழ்விடங்கள், செல்வச் செழிப்புகள் அதன் பாதுகாப்பு ஏற்பாடுகள், என அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தனர்.
கூடல் நகரின் வளமும் செழிப்பும் உமணர்கள் மூலம் நிலமெங்கும் பரவியது. இச்செய்தி கொற்கை பாண்டியனையும் அடைய தன் வீரர்களோடு புரப்பட்டுவிட்டான் கூடல் நோக்கி.
அன்று கூடல் வாசிகள் அனைவரும் வைகையில் நீராடி மகிழும் புனலாட்டு விழா. எனவே தான் கொற்கை பாண்டியன் அந்நாளை தேர்வு செய்தான். இதுவும் உமணர்களின் உபயம் தான்.
' கொற்றவை கூத்தில் கிணைப்பாணன் தனது கிணைப்பறையின் தாள லயத்தைக் கூட்டினான். பறையின் அகால ஓசையுடன் குலப்பாடகனின் குரல்நாளங்கள் வெடித்துக் கிளம்ப அன்றைய நாளின் கொடூரத்தை கூற அவனது நா எழவில்லை.
வைகையின் பெருவெள்ளம் குதித்தோட அழகாய் புலர்ந்த அந்த பொழுதில், கூடல் வாசிகள் அனைவரும் நதிக் கரையில் ஆவலோடு காத்திருந்தனர்.
யானை மீதமர்ந்திருந்த குலத்தலைவன் கையசைவிற்க்காக அனைவரும் காத்திருக்க ஆகுதை வைகையை வணங்கி கூட்டத்தை நோக்கி கை அசைத்தான்.
புனலாட்டு விழா தொடங்க வைகைக் கரையில் இருந்த இளைஞர்களும் இளைஞிகளும் நதியின் உள்ளே இறங்கினர். புனலாட்டு விழா காதலர்கள் ஒருவரை ஒருவர் நீரால் அடித்து விளையாடும் காதல் திருவிழா. மணமானவர்களும் கூட தம் இணையோடு வைகையில் நீராடி, காதல் பேசி விளையாடுவர்.
மண்ணில் கால் படாது மிதப்பது போல் நடப்பது தண்ணீரிலும் காதலிலும் தான். இரண்டும் ஒன்று சேர்ந்தால்?குலத் தலைவன் அகுதை உள்ளிறங்க கரையில் நின்றிருந்தவர்கள் காத்திருக்க , காதலுடன் தனது மனைவியைப் பார்த்தான் அகுதை. அவனது தோள்பிடித்து உள்ளிறங்கும் பொழுதுக்காக அவளும் காத்திருக்க , அகுதை நதி நீருக்குள் கால் நுழைத்தான். அகுதைய பார்த்துக் கொண்டே அவன் தோளில் சரிந்து விழ வேண்டும் என்று நினைத்தபோது, அவர்களுது மகனோ பெருங் குரலெடுத்து அழ ஆரம்பித்தான்.
``குழந்தை பயந்து விட்டான் போலும். அவனை அமைதிப்படுத்தி விட்டு வந்து விடுகிறேன். நீங்கள் நீரடுங்கள்’’ என்றுரைத்து குழந்தையை சமாதானப்படுத்த முயன்றாள்; முடியவில்லை. நீருக்குள் இருந்த அகுதை மனைவியை தான் பார்த்துக்கொண்டிருந்தான் அகுதை. குழந்தையும் அழுகையை நிருத்தவில்லை. வேறு வழியில்லாமல் குழந்தையைத் தூக்கிக்கொண்டு, நதிக்கரைவிட்டு சற்றே அகன்று உள்காட்டுக்குள் சென்று குழந்தையின் முதுகைத் தட்டி , எதேதோ செய்து
சமாதானப்படுத்தினாள்.
குழந்தை அழுகையை நிறுத்தமால் இருக்க , சத்தம் கேட்காமல் இருக்க அடர்ந்த மரங்களுக்கு உள்ளே சென்றாள். உள்ளே செல்லச் செல்ல மனிதர்களின் ஓசையின் அளவு கூட , மனிதக் கூக்குரல் எங்கும் எதிரொலித்தது. சிறிது
நேரம் யோசித்தவள், அகுதையின் கண்கள் தான் தன்னைத் தடுமாறவைக்கிறது என நினைத்தபடி அடர் காட்டில் வெகுதொலைவு சென்றாள்.
அங்கு தரையில் அழகிய செந்நிற பட்டுப் பூச்சி ஒன்று நகர்ந்துகொண்டிருக்க , குழந்தையை அதன் அருகில் இறக்கிவிட்டதும் குழந்தையும் பூச்சியிடம் விளையாட, பார்த்துக் கொண்டிருந்தவள் எண்ணம் முழுதும் அகுதையே.
அகுதை, அதிகம் பேசாதவன். ஆனால், அந்த இரவில் அவன் பேசியவை இந்த உலகில் வேறொருவன் பேசக்கூடும் என்பது சந்தேகமே. காதலில் சின்னஞ்சிறு சொற்கள்தான் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தும் அவனது ஒற்றைச் சொல்லில் உடல் முழுதும் பரவிய வெட்கம் , அவன் சொல் என நினைவு எங்கெங்கோ செல்ல சிலிர்த்துகொண்டாள். பின் எண்ணத்தை கைவிட்டு குழந்தையை பார்க்க அவன் செம்மூதாயின் பின்னால் நகர்ந்து கொண்டிருந்தான்.
திருமணம் முடிந்த முதல் புனலாட்டு விழாவில் அவள் கருவுற்றிருக்க அவளால் ஆற்றில் இறங்க முடியாது போனது. இம்முறையும் தனியாகவே அகுதை ஆற்றுக்குள் இறங்கினான்.
குழந்தை நீண்ட நேரம் விளையாடி அமைதி அடைய, அவள் காட்டைவிட்டு நதியை நோக்கி வர விழா கொண்டாட்டத்தின் பேரொலி கேட்காமல் பேரமைதியே நீடித்தது.. ஏன் இந்த அமைதி என யோசித்தபdiye , நதிக் கரையில் ஏறி பார்த்தாள்.
சற்று முன் காதல் கரைபுரண்டோட
நீண்டிருந்த அவ்வைகையில் குருதி கரைபுரண்டோட, கரையெங்கும் ஈட்டியும் வாளும் கொண்டு வேற்று குலத்தினர் நின்றிருந்தனர்.
குலப்பாடகன் குரல் வெடித்து சிதறியது. அப்பப்பா.. எத்தனை துக்கம் அக்குரலில்.
குரல் உடைய பாரி கபிலரிடம் “அகுதையின் மனைவி எதிரிகளிடமிருந்து கையில் குழந்தையோடு தப்பி முதுகிழவன் ஓருவன் துணைகொண்டு பல மாதங்களுக்கு சென்று பறம்பு வந்தாள். பறம்பின் மக்கள் அவளை காத்தனர். இப்போது அவர்களின் வழித்தோன்றல் கொற்றவைக்குக் காளையைப் பலிகொடுத்துச் சூளுரைக்கப் போகிறான்” என்றான்.
கபிலருக்கு ஆர்வம் மேலோங்க , அகுதை எனும் மாமனிதனின் வம்சக்கொடியைக் கான ஆடுகளத்தையே இமைக்காமல் பார்த்திருக்க , அந்த மகத்தான குலத்தில் உதித்த வீரத்திருமகனைக் கண்டு வணங்க அவரை அறியாமலே கைகள் கூப்பின.
அந்த திருமகன் "நீலன்"
அன்று பாண்டியனின் பேராசை வைகை யில் குருதியை ஓட விட்டான்.
இன்று.. வைகையின் நிலை என்ன??
நன்றி: திரு சு. வெங்கடேசன் அவர்கள் எழுதிய வீரயுக நாயகன் வேள்பாரி ( ஆனந்த விகடன்)

Comments
Post a Comment