🐅
காட்டுப் பாதையில், காய்ந்த விறகுகளைத் தலையில் சுமந்தபடி வந்துகொண்டு இருந்தான் ஒருவன்.
வழியில், மரத்தடியில் நரி ஒன்று படுத்திருந்தது. அந்த நரிக்கு முன்னங்கால்கள் இரண்டுமே இல்லை. ஏதோ விபத்தில் கால்களை இழந்திருக்கும் போல!
"ஐயோ பாவம்! இந்த நரிக்கு இரண்டு கால்கள் இல்லையே. இதனால் உணவு தேட முடியாதே. கால் இல்லாத நரிக்கு இங்கு யார் உணவு தருவார்கள்?"
வாய்விட்டுப் புலம்பினான்.
"கவலை வேண்டாம். கடவுள் காப்பாற்றுவார்!" என்று சொல்லிவிட்டுப் போனார், அந்த வழியே சென்ற பெரியவர் ஒருவர்.
‘எப்படிக் காப்பாற்றுவார்? அதையும் பார்ப்போமே’ என்று அங்கேயே நெடுநேரம் காத்திருந்தான்.
அப்போது, சிங்கம் ஒன்று மானை அடித்து இழுத்து வந்து அங்கு போட்டது. மானை பாதியளவே சாப்பிட்ட சிங்கம் மீதியை அங்கேயே போட்டுவிட்டுச் சென்றது.
இதைக் கண்ட நரி, மெள்ள நகர்ந்து சென்று அங்கே கிடந்த மிச்சசொச்ச மாமிசத்தை சாப்பிட்டது.
இவற்றைக் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்த ஆசாமி ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். ‘இரண்டு கால்களும் இல்லாத, வயசான நரிக்கே உணவு கொடுக்கும் இறைவன், தினமும் கோயிலுக்குச் சென்று வழிபடும் நமக்கு உணவு தர மாட்டானா? நிச்சயம் தருவான். எனவே, இனி வெயில், மழை என்று ஏன் கஷ்டப்படவேண்டும்?’ என்று சிந்தித்தான்.
இதையடுத்து வேலை செய்வதை அடியோடு நிறுத்திக் கொண்டான். கோயிலுக்குச் சென்று மண்டபத் தூணில் சாய்ந்து அமர்ந்தான்; ஆண்டவனே கதி என்று கிடந்தான். ‘கடவுள் நமக்கு ஏதேனும் தருவார்’ என்று காத்திருந்தான்.
ஆனால், அவன் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை. நாளுக்கு நாள் பசியால் வாடிப்போய், உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாகக் காட்சி அளித்தான். ஓர் அடி எடுத்து வைக்கவும் உடலில் தெம்பு இல்லாத நிலை.
ஒருநாள், நள்ளிரவு நேரம். மெள்ளக் கண்களைத் திறந்து பார்த்தான். கோயிலில் எவரும் இல்லை, கடவுளைத் தவிர. "கடவுளே! எனது பக்தியில் உனக்கு நம்பிக்கை இல்லையா? கால் இல்லாத நரிக்குக்கூட சிங்கத்தின் மூலம் உணவு வழங்கினாய்.
அதையே பாடமாக, வேதமாக எடுத்துக் கொண்டுதானே இங்கு வந்து கிடக்கிறேன். எனக்கு ஏதும் தரமாட்டாயா? பட்டினி கிடந்து நான் சாகத்தான் வேண்டுமா?" என்று சந்நிதியைப் பார்த்துக் கதறினான்.
இப்போது கடவுள் பேசினார்: "முட்டாளே! நரியிடம் இருந்து உன்னை யார் பாடம் கற்கச் சொன்னார்கள்? சிங்கத்தைத்தானே பாடமாக ஏற்றிருக்க வேண்டும்?"
நம்மில் பலர் ‘நமக்கு யாராவது உதவுவார்களா?’ என்று எண்ணுகிறோமே தவிர , நம்மால் யாருக்கேனும் உதவ முடியுமா?’ என்று எண்ணுகிறோமா??
நன்றி.

Comments
Post a Comment