ஒரு நாள் காட்டில் , மரக் கிளையில் அமர்ந்திருந்த குரங்கு ஒன்று, தற்செயலாக மரத்தின் கீழே கவனித்தது.
அங்கு, சிவப்பாக ஏதோ தெரிய , நன்றாக உற்றுப் பார்த்தது.
அது - குரங்குக்கு மிகவும் பிடித்த பழம்! உடனே, கிடுகிடுவென கீழே இறங்கி வந்தது. ஆனால், அந்தப் பழம் ஒரு சின்னக் கண்ணாடிக் குடுவைக்குள் இருந்தது. குரங்குக்கு ஆசை ஆபத்தை மறைத்து விட்டது.
குரங்கு, ஆர்வத்துடன் குடுவைக்குள் கையை விட்டு உள்ளே இருந்த பழத்தைப் பிடித்துக்கொண்டு கையை வெளியே எடுக்க முயன்றது. முடியவில்லை!
கண்ணாடிக் குடுவையின் கழுத்து குறுகலாக இருக்க பழத்தையும் சேர்த்து கையோடு எடுக்க முடியவில்லை. பழத்தை விட்டுவிட்டால், கை வெளியே வந்துவிடும். அனால் இது அந்தக் குரங்குக்குத் தெரியவில்லை.
சரி, அதோடு விட்டதா? சற்று தூரத்தில் இன்னொரு குடுவை. அதன் உள்ளேயும் ஒரு பழம்! ஓடிச் சென்ற குரங்கு, இன்னொரு கையை அந்தக் குடுவைக்குள் விட , அந்தக் கையும் மாட்டிக் கொண்டது. இப்போது, குரங்கின் இரண்டு கரங்களிலும் குடுவை. அவற்றைச் சுமந்து கொண்டு ஓடவும் முடியவில்லை.
இந்த நேரத்தில், வேடன் ஒருவன் ஓடி வந்தான். கண்ணாடிக் குடுவைக்குள் பழத்தைப் போட்டு வைத்தவன் இவன்தான்.
ஆம், குரங்கைப் பிடிக்க வேடன் செய்த தந்திரம் இது! இப்படி, கண்ணாடிக் குடுவையில் பழத்தைப் போட்டு வைத்தால், ஏதேனும் ஒரு குரங்கு நிச்சயம் மாட்டிக்கொள்ளும் என்பது அவனுக்குத் தெரியும்.
குரங்கு எப்படி சிந்திக்கும் என்பதையும் அவன் அறிவான். இப்போது, அந்தக் குரங்கு கண்ணாடிக் குடுவையுடன் போராடிக்கொண்டு இருந்தது. வேடன், நிதானமாக நெருங்கி வந்தான்.
குரங்கு ஓட முயன்றது. முடியவில்லை. ஆனாலும் அதன் மனதுக்குள் ஓர் ஆறுதல். ‘நல்லவேளை! பழம் நம் கைக்குள்ளேதானே இருக்கு!’
குரங்கைப் பிடித்த வேடன், அதன் தலையில் ஒரு தட்டு தட்டினான். இந்த அதிர்ச்சியில், பழத்தை விட்டது குரங்கு. இப்போது அதன் கைகளை வெளியே எடுக்க முடிந்தது.
ஆனால், என்ன செய்ய? அந்தக் குரங்கு, வேடனிடம் சிக்கிக் கொண்டதே!
இதில் வரும் அந்தக் குரங்கு போன்றதுதான் மனிதனின் மனமும்!
வேண்டாத ஆசையில், கையைவிட்டு மாட்டிக்கொள்கிறான். வாழ்க்கையில் தவிக்கிறான்.
காலத்தின் காலன் வந்து அவன் தலையில் தட்டும் வரை, அவனால் பிடியைவிட முடிவதே இல்லை.
நன்றி

Comments
Post a Comment