‘கடவுளைப் பார்க்கவேண்டும்’ என்று விரும்பினான் ஒருவன்.
அவனை சந்தித்த ஞானி ஒருவர், "கடவுளைப் பார்ப்பது இருக்கட்டும். முன்னதாக கடலைப் பார்க்கலாம் வா!" என்று அழைத்துச் சென்றார்.
இருவரும் கடற்கரையை அடைந்ததும், ஞானி ஒரு கதை கூறினார்: "இந்தக் கடலில் வசிக்கும் ஒரு மீனுக்கு, ‘கடல் எங்கே இருக்கிறது?’ என்று அறிய ஆவல். பலரையும் கேட்டுப் பார்த்தது. ‘நாங்களும் கேள்விப்பட்டிருக்கிறோம்; ஆனால் அது எங்கே இருக்கிறது என்றுதான் தெரியவில்லை’ என்றே பதில் வந்தது. "
ஏமாற்றத்துடன் அங்குமிங்கும் அலைந்துகொண்டு இருந்த மீனின் எதிரில், வேறொரு பெரிய மீன் வந்தது. பார்ப்பதற்கு கொஞ்சம் அனுபவசாலி போலத் தோன்றியதால், அந்தப் பெரிய மீனிடமும் தனது கேள்வியைக் கேட்டது சிறிய மீன்.
"சற்றே யோசித்த பெரிய மீன், ‘நீ அங்கேதான் பிறந்தாய்; அங்கேதான் வளர்கிறாய்; அங்கேதான் மறையப் போகிறாய்!’ என்றது. இந்த பதிலில் திருப்தி இல்லாத சிறிய மீன் மீண்டும் ‘சரி, அது எங்கே இருக்கிறது?’ கேட்டது: " ‘அது தெரியாது!’ என்ற பெரிய மீன், அங்கிருந்து நழுவியது.
இனி, யாரைக் கேட்கலாம் என்று சிந்தித்தபடி நீந்திய அந்த மீன் எதிர்பாராதவிதமாகக் கரைக்கு அருகில் வந்துவிட்டது. அலைகளின் வேகத்தில் கரையில் சென்று விழுந்தது. இப்போது அந்த மீனுக்கு பதில் கிடைத்தது.
இதோ! இதுவரை நான் தேடிக்கொண்டு இருந்த கடல் என் கண்ணெதிரில் தெரிகிறது!
"அத்துடன் மற்றொரு விஷயமும் அதற்குப் புரிந்தது. அதில் இருக்கிறவரை, நாம் இருக்கும் இடம் நமக்கு எப்படித் தெரியும்? விலகி வெளியே வந்தால்தானே அது புரியும் என்பதையும் உணர்ந்தது அந்த மீன்" என்று கதையை முடித்தார் ஞானி.
கதையைக் கேட்டவன் எழுந்து நின்று, "சுவாமி! எனக்கு விடை கொடுங்கள்" என்றான்.
ஞானி "கடவுளைப் பார்க்க வேண்டும் என்றாயே?" என்று கேட்டார்.
"என்னை நானே எப்படிப் பார்க்க முடியும்? என்னை விட்டு நான் விலகினால்தான் அது சாத்தியம்!" என்று கூறிவிட்டுப் புறப்பட்டான் அவன்.
இன்றைய பக்தன் ஒருவகையில் விவரம் தெரிந்தவனாகவே இருக்கிறான். தான் வேறு இறைவன் வேறு என்ற எண்ணம் அவனிடம் இல்லை. எனவேதான் இறைவனிடம் நைவேத்தியத்தைக் காண்பித்துவிட்டு, தானே அவ்வளவையும் சாப்பிட்டு விடுகிறான்! தவிர தனக்குப் பிடிக்காத எதையும் இறைவனுக்குப் படைப்பதில்லை அவன்.
மனித உடலே ஒரு கோவில் என்றால் , அந்த கோவிலில் கடவுள் இருக்கிறாரா??

Comments
Post a Comment