சீட்டு சாமியார்
- தென்கச்சி கோ சுவாமிநாதன்
"இவ்ளோ அவசரமா எங்கே போறே?" வேகமாக ஓடும் ஆசாமி ஒருவனை வழிமறித்துக் கேட்டார் நம்மவர்.
"சேதி தெரியாதா உங்களுக்கு? நம்ம ஊருக்குப் புதுசா சாமியார் ஒருத்தர் வந்திருக்கார். அவரைப் பார்க்கத்தான் எல்லோரும் போய்க்கிட்டிருக்கோம்." என்று மூச்சிரைக்கத் தெரிவித்தார் ஓடி வந்தவர்.
"அதுக்கு ஏன் இப்படி ஓடறீங்க?" "சீட்டு தீர்ந்துபோச்சுன்னா?"
"என்னது சீட்டா?"
"ஆமாம்! அந்த சாமியார் சீட்டு விற்கிறார். ஒரு சீட்டு 100 ரூபாய்! அதை வாங்கினா, இதுவரைக்கும் செஞ்ச பாவம்லாம் போயிடும். பேசறதுக்கு நேரமில்லே. ஓடி வா என் கூட."
இருவரும் ஊர் எல்லைக்கு ஓடினர். அங்கிருந்த ஒரு மண்டபத்தில், மக்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தனர். உள்ளே சாமியார், மளமளவென சீட்டுகளை விற்றுக்கொண்டு இருந்தார். கூட்டத்தில் முண்டியடித்து சீட்டு வாங்கியவர்கள், ‘அப்பாடா!’ என்ற நிம்மதியுடன் வெளியே வந்து கொண்டிருந்தனர்.
நம்மவரும் அடித்துப் பிடித்து உள்ளே புகுந்தார். "எனக்கு ரெண்டு சீட்டு கொடுங்க" என்று 200 ரூபாயை நீட்டியவர், சீட்டை வாங்கிக்கொண்டு திரும்பினார்.
ஒருவழியாக விற்பனை முடிந்து, கூட்டமும் கலைந்தது. அன்றைய வசூல் 10,000 ரூபாய்க்கு மேல் சேர்ந்திருந்தது! பணத்தை ஒரு மூட்டையாகக் கட்டி, தோளில் போட்டுக் கொண்டு மகிழ்ச்சியுடன் அடுத்த ஊருக்கு நடையைக் கட்டினார் சாமியார்!
இருட்டத் துவங்கியது. காட்டின் வழியே பயணித்துக் கொண்டிருந்தார் சாமியார்.
திடீரென, திருடன் ஒருவன் சாமியாரை வழிமறித்தான். சாமியாரிடம் கத்தியைக் காட்டி, "உங்கிட்ட இருக்கற பணத்தை மரியாதையா கொடுத்துடு. இல்லேன்னா, உன்னைக் கொன்னுருவேன்!" என்று மிரட்டினான். பதறிப் போனார் சாமியார். ‘பணத்தைவிட உயிரே முக்கியம்’ என்று எண்ணியவர், பண மூட்டையைத் திருடனிடம் கொடுத்தார்.
இருந்தாலும் ஓர் ஆற்றாமை, திருடனிடம் கேட்டார்: "இது மகா பாவம், தெரியுமா உனக்கு?"
அவரைப் பார்த்துப் புன்னகைத்த திருடன், "தெரியும்! அதனாலதான் நான் ரெண்டு சீட்டு வாங்கினேன். இதுவரைக்கும் நான் கொள்ளையடிச்ச பாவம் தொலையறதுக்காக ஒரு சீட்டு; இப்ப உங்கிட்ட கொள்ளையடிக்கிறேனே, அந்தப் பாவம் தொலையறதுக்காக இன்னொரு சீட்டு!" என்று பதில் சொல்லி விட்டு இருட்டுக்குள் ஓடி மறைந்தான்.
சாமியார் சிலையாக நின்று சிந்தித்தார். அவருக்கு ஓர் உண்மை புரிந்தது. ‘ஆன்மிகம் எனும் போர்வையில், எல்லாரையும் எல்லா காலத்திலும் ஏமாற்றிவிட முடியாது!’

Comments
Post a Comment