🌹மனிதனால் ஒருபோதும் காதலை அழைத்துவர இயலாது.காதல்தான் அவனை அழைத்துவரும் .
முருகன் சொன்னபடி பரண் அமைக்க வேண்டி, எவ்வி காலையில் இருந்தே இடம் தேடிக் கொண்டிருந்தான் எவ்வி. அவனுக்கு முருகன், வள்ளியோடு வருவான் என்று சொன்னதில் சிறிது கூட சந்தேகம் இல்லை. `பச்சைமலையில் உள்ள யானைப்பள்ளத்தின் தென்திசையில் இருந்த ஒரு முகட்டில், வேங்கைமரம் ஒன்று தனித்து இருக்க , அதை கண்டு எவ்வி 'இப்படி ஓர் இடத்தில், தனித்த வேங்கை மரத்தை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.எனவே இதுவே சரியான இடம்' என்று தீர்மானித்தான்.
எவ்வி, மரத்தின் மீது ஏறி அதன் உச்சியின் மேற்கொப்பில் நின்று நான்கு புறமும் பார்க்க மொத்த மலையும் அந்த வேங்கைமரத்துக்குக் கீழ்ப்பணிந்தது போல் இருந்தது. எல்லா திசைகளில் இருந்தும் காற்று சுழன்று அடிக்க அதன் வேகத்துக்கு ஏற்ப வேங்கை மரத்தின் மீது மோதி இசை மீட்வது போல் இருந்தது.
குறிஞ்சி நிலத்தின் பேரழகே முருகன் வள்ளியின் தலை நாள் இரவுக்காக இந்த நாளுக்காக தான் வடிவமைக்கப்பட்டது. வானில் வெள்ளிகள் கை எட்டும் தூரத்தில் பூத்துக்கிடக்க, கால்களுக்கு கீழே இந்த பெருங்காடு மிதக்க, காமம் பெருத்து, காதல் தழைக்க இதுவன்றி சரியான இடம் வெறேது ? என எண்ணியபடி பரன் அமைக்கும் பணியில் இறங்கினான்.
வேங்கைமரத்தின் உச்சியில், நான்கு கிளைகளுக்கு நடுவிலே சந்தனமரக் கட்டைகளைக் குறுக்கிட்டு அடுக்கி, அதை கொடிகளிலே மிக உறுதியான சிலாக்கொடியினால் இறுகக் கட்டினான். . இந்த கொடிக்கு இன்னொரு சிறந்த குணமும் உண்டு, அது என்னவென்றால் கொடியை அறுத்த மூன்று நாட்கள் ஆனாலும் அதனுடைய சாறு கசிந்து ஈடில்லா நறுமணம் வெளிவந்து கொண்டே இருக்கும். 'சந்தன கட்டையின் வாசத்தோடும் சிலாக்கொடியின் நறுமணத்தோடும் வேங்கைமர உச்சியில் பார்க்கும் திசை யாவும் பச்சைமலைக் காற்றை அள்ளி அணைத்து என் குறிஞ்சித் தலைவனும் தலைவியும் நடத்தும் ஆதிக்கூத்து, எமது குலத்தைப் பெருக்கி, காதலைத் தழைக்கச்செய்திடும்.' எவ்வி இதையெல்லாம் எண்ணிக்கொண்டே பெருமிதத்தோடு தன் வேலையை முடித்து, மீண்டும் தினைப்புலம் காக்கும் இடத்துக்கு மாலை மயங்கி, கருக்கத் தொடங்கிய நேரம் வந்தான். அங்கே வள்ளியோடு முருகன் அவன் எதிர்பார்த்தது போலவே வந்தான். அது என்னவோ காதலிக்கத் தொடங்கியதும் வரும் அழகு இருக்கிறதே, அப்பப்பா… மனிதர்களைக் கண்டு மலர்கள் கூட மயங்கும் காலம் அதுவாகத் தான் இருக்க கூடும்..
முருகன் எவ்வியிடம் கேட்கும் முன்பே மேல் திசை நோக்கி கையைக் காட்டினான் எவ்வி. தலையை உயர்த்தி மேலே பார்த்த முருகன் ' இது என்ன நிலவிலே பரண் அமைத்து விட்டானா இவன்?’ என்பதுபோல பார்த்தான். ‘நிலவில் பரண் அமைத்தது போல் இருந்தாலும் அங்கு செல்ல பரண் நோக்கி படி அமைத்திருக்கிறேன். அங்கு செல்வது உன் வேலை' என்பது போல் பதில் பார்வை பார்த்தான் எவ்வி.
தீப்பந்தம் ஏந்தியபடி எவ்வி முன் செல்ல முருகனும் வள்ளியும் அவனைத் தொடர்ந்தனர். அப்படித் தான் அவன் நினைத்துக்கொண்டான். தனக்குப் பின்னால் இருவரும் இருளுக்குள் எத்தனை விளையாட்டு? இந்த சின்னச்சின்னச் சிரிப்புகளுக்கு என்ன அர்த்தமோ? ஒரு வேளை இது பதிலாக இருக்குமோ...அல்ல கேள்வியா?, இவ்வளவு மெதுவாக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ள முடியுமா? இவர்கள் என் பின்னால் தான் வருகின்றனரா?? ஓசையே ஏதும் இல்லையே!
இந்த முருகன் வள்ளியை கை பிடித்து வருகிறானா... அல்ல அவளை சுமந்து கொண்டு வருகிறானா? இப்போது திரும்பிப் பார்த்தால் அவர்களின் நெருக்கம் குலைந்துவிடக் கூடும். திரும்ப வேண்டாம்' என யோசித்தபடியே, வேங்கைமர அடிவாரம் வந்து சேர்த்த எவ்வி , பந்தம் ஒளியில் முருகனும் வள்ளியும் ஏற்கெனவே அங்கு வந்து அமர்ந்து இருந்தது கண்டு அதிர்ந்துபோனான்.
“நீங்கள் இருவரும் என்னைப் பின்தொடர்ந்து வருகிறீர்கள் என்றுதானே நினைத்தேன்!”
“மனிதனால் காதலை ஒரு போதும் அழைத்துவர முடியாது .. காதல்தான் அவனை அழைத்துவரும்.”
இப்போது எவ்வி பேச வார்த்தைகள் அற்று அவர்களை வணங்கி விடைபெறும் நேரம் முருகன் எவ்வியின் கையில் ஒரு பொருளைக் கொடுக்க ,' இது என்ன ' என்பது போல் எவ்வி பார்த்தான்.
“இது எமது காதலின் பரிசு.. ” என்றாள் வள்ளி.
முருகனும் வள்ளியும் மர ஏணியில் ஏறிச்சென்று பரணில் அமர , அந்த இருளுக்குள் இருந்து, மென்காற்று இசையைச் சுரந்து கொண்டிருந்தது.. வேங்கை மரத்தின் அசையும் இலைகளுக்கு இடையே வானின் விண்மீன்கள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன.
இதைக் கண்ட வள்ளி “இத்தனை கண்களுக்கு இடையில் எப்படி நாம் வெட்கம் களைவதாம்?” என்று நாணினாள்.
அங்கு அவர்களின் தலைஇரவு தொடரட்டும். வாருங்கள் நாம் எவ்வியுடன் கீழே போவோம்.
முருகனிடம் விடை பெற்று எவ்வி , காரமலையின் அடிவாரத்தில் இருக்கும் தனது ஊருக்கு வந்துசேர “முருகன் எங்கே?” என்று கேட்டவர்களுக்கு எதேதோ ஒரு பதிலைச் சொன்னான்.
எவ்வி வாழ்நாளில் இதுவரை அடைந்திறாத ஒரு மகிழ்வை அடைந்திருப்பதாக எண்ணி அவன் மனம் நெகிழ்ந்தது. அது தன் நண்பனுக்காக என்று அவன் மனம் அறியும். எந்த காலத்திலும் காதலுக்கு ஆதரவு தருவது நட்புதான்.
எவ்வி முருகன் தனக்குத் தந்த காதல் பரிசைக் கண்டான். பூண்டுபோல் இருந்ததை `என்ன செய்வது?' என யோசித்தபடி அந்த பூண்டைத் தட்டி, பக்கத்தில் நீர் நிறைந்திருந்த பைங்குடத்தில் போட்டு வைத்தான்.அந்த குடத்து நீருக்குள் இருந்து குமிழ்கள் இடைவிடாது வர , நீர் பழச்சாறுபோல மாறியது.
அந்த பழச்சாறு எடுத்து மூங்கில் குடுவையில் ஊற்றி ஒரு வாய் குடிக்க அதன் சுவைக்கு ஈடு சொல்ல வார்த்தைகளே இல்லை அவனிடம். இதுவரை மனிதர்கள் யாருமே இப்படி ஒரு சுவையை சுவைத்திருக்க மாட்டார்கள்.
குடத்தில் இருந்த மொத்த நீரையும் குடித்து முடித்து , அந்த பூண்டு அடியில் அப்படியே இருக்க மீண்டும் குடம் நிறையத் தண்ணீரை ஊற்றினான். மீண்டும் நீர், பழச்சாறாக உருமாற மீண்டும் அதைக் குடிக்க எத்தனிக்கையில் , அந்த காட்டின் கீழ்ப்புறம் பெரும் ஓசை கேட்க, குடத்தை வைத்துவிட்டு வெளியே ஓடிவந்து பார்த்தான்.
அங்கே , கையில் தீப்பந்தங்களோடு மனிதக் கூட்டம் ஒன்று வேட்டுவன் பாறைக்குப் பின்புறமாக நடந்து, காட்டின் தென்திசை நோக்கிச் சென்று கொண்டிருக்க `இந்த நள்ளிரவில் யார் பந்தம் ஏந்தி இங்கு சென்று கொண்டிருக்கின்றனர்?'ஒவ்வொருவருக்கும் ஒரு சந்தேகம் எழ , முதுகிழவன் ஒருவன் “நாம் கீழே இறங்கி சென்று , யார் அவர்கள் .. எங்கே செல்கின்றனர்... என்ன நேர்ந்தது என்று கேட்டு வருவோம்” என்றார்.
“அவர்கள் நம் மீது தாக்குதல் தொடுத்துவிட்டால் என்ன செய்வதாம்?”
“அது ஒன்றும் பயமில்லை..இது நமது இடமாகும். நம்மை யாரும் எதுவும் செய்துவிட முடியாது”
“அப்படியென்றால் வாருங்கள் நாம் செல்வோம் '' என்று சிலர் மட்டும் புறப்பட்டுச் சென்றனர். மற்றவர்கள் குடிலைக் காத்தபடி மேலேயே நின்றனர்.
எவ்வி முதுகிழவனுடன் முன்னால் செல்ல, சிலர் அவர்களை பின்தொடர்ந்தனர். மலைச்சரிவில் வேகமாக இறங்கும் பொது எங்கு இருந்தோ வந்த பலத்த காற்று அவர்கள் மீது மோதிச் சென்றது. எவ்விக்கு, உடனே `இந்தக் காற்றுக்கு வேங்கை மரத்து பரண் தாங்குமா?' என, மனதுக்குள் சின்னதாக அச்சம் எழ ,தென்திசை உச்சியை ஒருமுறை அண்ணாந்து பார்த்தான். அடுத்த நிமிடமே அடுத்த சந்தேகம் வந்துவிட்டது அவனுக்கு..`ஒருவேளை வேங்கைமரம் இந்தக் காற்றே உருவாகியிருக்குமோ?' என்று..
இரவு மலர்கள் மலரத் தொடங்கி, திசை எங்கும் புதிய நறுமணம் படர்ந்தது மூங்கில் அடர்ந்த கீழ்த் திசையிலிருந்து குழலிசையைக் காற்று அள்ளிவந்தபோது, அதனுடன் காதலின் உயிரோசையும் இணைய வேங்கைமரம் நிலைகொள்ளாமல் ஆடிக் கொண்டிருந்தது.
“எங்கே போகிறீர்கள்?” என்று
தீப்பந்தம் ஏந்தி, சென்றுகொண்டிருந்தவர்களை நோக்கி வேடர் குல முதுகிழவன் மறித்துக் கேட்டான்...
முதுகிழவன் கேள்வி கேட்க "பச்சைமலையின் ஈரடுக்கின் கீழ் வாழும் நாங்கள் கொடி குலத்தைச் சேர்ந்தவர்கள். எங்கள் குலமகள் வள்ளி நேற்று காலை குடில் விலகி, தினைப்புனம் காக்கச் சென்றவள் பரணுக்கும் போகவில்லை , எங்கே போனாள் என அவள் தோழிகளுக்கும் தெரியவில்லை.வள்ளியைக் காணாமல் அவர்களாகத் தேடிப்பார்த்துவிட்டு, இன்று மாலை தான் எங்களிடம் சொன்னார்கள். மாலையிலிருந்து நாங்களும் தேடிவருகிறோம். எங்கேயும் இல்லை. கீழ்த்திசை நோக்கி ஒரு குழு சென்றுள்ளது. எங்களது குழு யானைப்பள்ளம் நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்” என்றான் ஒருவன்.
அப்போதுதான் எவ்விக்கு அந்த ஆபத்து புரிந்தது. `இவர்களை யானைப்பள்ளம் இருக்கும் பக்கம் போகவிடக் கூடாதே.. என்ன செய்வது ' எனச் யோசிக்கும் போதே , முதுகிழவன் ஒருவன் , “இத்துணை பெருங்காட்டில் நீங்கள் மட்டும் எவ்வாறுத் தேடுவீர்கள்?உங்களுடன் நாங்களும் வருகிறோம். வாருங்கள் ஆளுக்கு ஒரு பக்கமாகத் தேடுவோம்” என்றார்.
இப்போது தான் ஆபத்து, பேராபத்தாக மாறியது. `இது என்னடா இப்படி ஆகிவிட்டதே.. என்ன செய்யலாம்?' என யோசிப்பதற்குள் முதுகிழவன், “ஏன் இன்னும் நிற்கிறீர்கள்... புறப்படுங்கள் செல்லலாம் ” என்று சொல்லி, கொடி குலத்தவர்களோடு நடக்கத் தொடங்கினார்.
எவ்வி உடனே ' சற்று நில்லுங்கள். நான் இன்னும் சிலரை அழைத்துவருகிறேன்” என்று சொல்லி குடிலை நோக்கி விரைந்து ஓடினான். அவர்களும் `எவ்வி கூறுவதும் சரிதான், இன்னும் கூடுதல் ஆட்களோடு சென்று தேடுவது நல்லதுதானே' என எண்ணி , அவன் வரும் வரை பொறுத்திருந்தனர். அப்போது கொடி குலத்தைச் சார்ந்த ஒரு பெரியவர் “அடுத்த குலப்பெண்களுக்கு ஆபத்து என்றதும் உடனே உதவிசெய்ய உங்களைப் போல் இன்னொருவர் இந்தக் காட்டில் இல்லை” என்றார்.
வேடர் குல முதுகிழவன் சற்றே பெருமிதத்தோடு தலையசைத்தான்.
மேலே சென்ற வேகத்திலேயே எவ்வி மலை மேல் இருந்து இறங்கி வர அவனுக்குப் பின்னால் ஒருவன் மட்டும் பைங்குடத்தைத் தலையில் வைத்துத் தூக்கிவந்தான். ஆனால் வேறு ஆட்கள் யாரும் வரவில்லை. இவர்களோ ‘என்ன... இவன் யாரையும் அழைக்காமல், பானையோடு ஒருவனை மட்டும் அழைத்து வருகிறான்!’ என யோசிக்கும் போது, ‘`இன்னும் மற்றவர்கள் சில ஆயுதங்களோடு வருகிறார்கள். அவர்கள் இங்கு வருவதற்குள் நீங்கள் இந்தப் பழச்சாறை அருந்தி சற்று இளைப்பாருங்கள்” என்று கூறி, ஒரு மூங்கில் குவளையில் அனைவருக்கும் ஒரு குவளையாக அந்தப் பூண்டுச்சாற்றைக் கொடுத்தான்.அந்த பழச்சாற்றின் சுவையாலும் அது தந்த எல்லையற்ற மயக்கத்தாலும், ‘`இந்த பழச்சாறுக்கு நிகராக இந்த உலகில் வேறு எதுவும் இல்லை'’ என அனைவரும் அதைப் புகழ்ந்து பானை, முழுவதும் தீர்த்தனர்.. அதே சமயம் இன்னொருவன் தலையில் பானையோடு வந்து சேர பூண்டை எடுத்து அந்தப் பானையில் போட்டு அடுத்த சுற்று எல்லோரும் குடித்தனர்.
“ `எம் நிலமகள்... எம் குலமகள்' என்று என்னென்னவோ சொல்லி விட்டு இப்போது இந்த பழச்சாற்றைக் குடிக்க போட்டியிட்டு கொன்ண்டிருக்கிறார்கள் இவர்கள்” என்று சொல்லிக்கொண்டே மூன்றாம் குவளையை அருந்திய முதுகிழவனும் மயங்கிச் சாய்ந்தான். ஒருவழியாக எல்லோரும் விடாமல் குடித்து அதிமதுரச் சுவையில் மூழ்க எவ்வி தென்திசை நோக்கி புன்னகைத்துக் கொண்டான்.
அவ்வாறு அவர்கள் அந்த பழச்சாறு குடிக்கும்போது சிந்திய துளிகள் இந்தப் புற்கள் எங்கும் சிதற , பழச்சாற்றின் வாசனை காற்றில் கலந்து எங்கும் பரவி விட்டது. பாம்புகள் இந்த வாசத்தை நுகர காடு முழுவதும் இருந்து பெரும்வேகம்கொண்டு இந்த புல்லை நோக்கி வர பாம்புகளின் எண்ணிக்கையோ, கணக்கில் அடங்காமல் ஒவ்வொரு புல்லுக்கும் ஒரு பாம்பு வந்து சேர்ந்தது. இந்த புற்களில் இருந்த பழச்சாற்றுத் துளியை தம் நாவால் நக்க புல்லின் ஓரம் இருந்த சுனை ஈக்கிகள் பாம்புகளின் நாவுகளை இரு கூறுகளாக அறுத்துவிட்டன. எனினும் பழச்சாற்றின் சுவை அவற்றை ஈர்க்க மீண்டும் நக்கின. பாம்பின் அடித்தொண்டை வரை நாக்கு இரு கூறுகளாகப் பிளக்க அன்றில் இருந்து எல்லா பாம்புகளுக்கும் நாக்குகள் இரு கூறுகளாயின. அதனால் தான் இந்தப் புற்கள் `நாக்கறுத்தான் புற்கள்' ஆயின என்று நீலன் கதையை முடித்தான்.
(நாம் தர்பை புல் என்று கூறும் புல்லுக்கு நாக்கறுத்தான் புல் என்று ஒரு பெயரும், பாம்பின் நாக்கு ஏன் இரண்டாக பிளவு பட்டது என்பதற்கும், பின் இப்படி ஒரு கதை இருப்பது வேள் பாரி புத்தகம் படிக்கும் வரை எனக்குத் தெரியாது. இது ஆன்மீகத்திற்கும் அறிவியலுக்கும் அப்பாற்பட்டது. )
வள்ளி முருகன் காதல் பயனம் அடுத்த பதிவில்...👇

Comments
Post a Comment